உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் சிறுகுறு தொழில்கள் மேம்படும் தொழில் முனைவோர் நம்பிக்கை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் கோவையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும் என்று சிறுகுறு தொழில் முனைவோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீட்டால் தமிழகத்தின் சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும் என்று கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதலீடுகளால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

6 ஆயிரத்து 900 உறுப்பினர்கள் உள்ள கோவையின் கொடிசியா கூட்டமைப்பை சேர்ந்த தொழில்முனைவோர், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வரப்பிரசாதம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மொப்பேரிபாளையம் மற்றும் கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் 450 ஏக்கர் பரப்பளவில் சிறு, குறு தொழில் அமைப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் கோவையில் உள்ள அனைத்து சிறு குறு தொழில்களை மேம்படுத்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மிகப்பெரிய உதவிகளை செய்து வருவதாகவும் அதேபோல ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இங்கு வருவது இன்னும் அதிக மகிழ்ச்சியை தருவதாகவும் கோவை தொழில்முனைவோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பலதரப்பட்ட வகையிலும் பயனுள்ளதாக அமைவதாகவும் கூறுகின்றனர்.

தமிழகத்திற்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் வந்தால் இங்குள்ள தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். உலக முதலீட்டாளர் மாநாட்டில் இலவசமாக அரங்கு வைக்க அனுமதி அளித்துள்ளது தங்களுக்கு அதிக உத்வேகத்தை அளிப்பதாகவும் தொழில்முனைவோர் கூறியுள்ளனர்.

Exit mobile version