பேட்டரி மூலம் இயங்கும் பைக், மரக்கட்டையினால் ஆன கண் கண்ணாடி, பிளாஸ்டிக்குக்கு மாற்றான துணிப்பைகள் போன்ற எண்ணற்ற தயாரிப்புகளை உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ளன.உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 395 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் விலை உயர்ந்த காரில் இருந்து ராணுவத்திற்கு தயாரிக்கும் உதிரிபாகம் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக துணிப்பை தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளனர். இதேபோல், கண் கண்ணாடியில் மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு மாற்றாக மரத்திலான ஃப்ரேம்களை உடைய கண் கண்ணாடி மற்றும் கடிகாரத்தை பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளனர். இயற்கைகையை பிளாஸ்டிக் மாசுபடுத்தி வரும் நிலையில் இது போன்ற மரத்திலான கண் கண்ணாடி ஃப்ரேம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுவகையான பேட்டரி பைக் இந்த மாநாட்டு அரங்கில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பாக நடைபெறும் இந்த மாநாடு பிற மாநிலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல..