தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பெரிய கோயில் முடமுழுக்கை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. குடமுழுக்கு விழாவிற்காக யாகசாலை பூஜைகள் 1 ஆம் தேதி மாலை தொடங்கியது. இதற்காக வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு யாசாலையில் வைக்கப்பட்டது. 11 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பில் 110 யாக குண்டங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சிவச்சாரியார்களும், ஓதுவார்களும் கலந்து கொண்டு ஹோமம் நடத்தி வருகின்றனர். நாளை காலை 8ம் கால யாகசாலை பூஜை நடக்க உள்ளது.
இதற்காக ஆயிரம் கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம் உள்ளிட்ட 124 மூலிகை பெருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. காவல்துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக கோயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் 5 லட்சம் பேர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயிலில் விஐபிக்களுக்கு தனியாக 9 அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நின்று குடமுழுக்கு நிகழ்ச்சிகளை பக்தர்கள் தெளிவாக காண்பதற்காக கோயிலை சுற்றிலும் மிகப்பெரிய திரை வைக்கப்பட்டு உள்ளன.
இவ்விழாவையொட்டி 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.
இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி -தஞ்சை இடையே டிஇஎம்யு சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தஞ்சை சென்றடையும். தஞ்சை- திருச்சி இடையே டிஇஎம்யு ரயில் தஞ்சையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு திருச்சி வந்தடையும். இது தவிர தஞ்சை- மயிலாடுதுறைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூரில் இருந்து தஞ்சைக்கு 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரயில் இயக்கப்படுகிறது. காரைக்கால்-தஞ்சை இடையே இன்று முதல் 6ம் தேதி வரை டிஇஎம்யு ரயில் இயக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு, புதன்கிழமை விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், தஞ்சை கோயிலை பற்றிய சிறப்பு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.