உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன
டாண்டன் கவுண்டி கிரிக்கெட் மைதானதில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இதுவரை 3 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசையும் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலக கோப்பை போட்டியில் 1999ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சேசிங்கில் முதல் தோல்வியை இந்தியாவிடம் சந்தித்தது. இதனால் அந்த அணி வீரர்கள் மனதளவில் பலவீனமாக உள்ளனர்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி , ஒரு தோல்வி, ஒரு டிராவை கண்டுள்ளது.முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்று அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான 3 வது ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இன்றைய ஆட்டம் நடப்புச் சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன் இடையே நடப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது