உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொண்டு 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 31 வது லீக் போட்டியில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து 52 ரன்களில் ஆட்டமிழந்த வார்னர் இந்த உலககோப்பை தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரரானார். அதன் பிறகு உஸ்மான் கவாஜா 23 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய கேப்டன் ஃபின்ச் 100 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வின்ஸ் ரன் ஏதுக் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதை தொடந்து பேர்ஸ்டோ 27 ரன்களில் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு முனையில் போராடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களில் ஆட்டமிழக்க 44 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. ஆரோன் ஃபின்ச் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.