சான் மரீனோ:
தெற்கு ஐரோப்பாவின், அப்பெனின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சான் மரீனோ ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளிலேயே மிகச்சிறிய நாடாகும்.இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்டுள்ள சான் மரீனோ, உலகிலேயே மிகவும் பழமையான குடியரசு நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், உலகிலேயே மிகவும் பழமையான அரசியலமைப்பையும் கொண்டுள்ளது.
சான் மரீனோ நாடானது கி.பி.301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நாட்டின் இதன் அரசியலமைப்பு சட்டமானது கி.பி. 1600 இல் எழுதப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இயற்கை எழில் கொஞ்சும் படி, அமைந்துள்ள இந்த நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 28 ஆயிரத்து 118 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
லக்சம்பர்க் (Luxembourg):
மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள லக்சம்பர்க் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட, ஒரு சிறிய நாடாகும். இது ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை தனது அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. சுமார் 2,600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நாட்டில், ஐந்து லட்சத்திற்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றானர்.
லக்சம்பர்கில், அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்ட, முடியாட்சியுடன் கூடிய நாடாளுமன்ற மக்களாட்சி நடைமுறையில் உள்ளது.
இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும், தலைநகரமுமான லக்சம்பர்க் நகரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை இடமாக விளங்குகிறது.
இந்த நாட்டில் வாழும் மக்கள் லக்சம்பர்கி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகின்றனர்.
இயற்கையை அழிக்காத வகையில், அழகிய நகரக் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள லக்சம்பர்க், மதச்சார்பற்ற நாடாக கருதப்பட்டாலும் இங்கு ரோம் கத்தோலிக்க மதத்தவர்களே மிகுந்த அளவில் உள்ளனர்.
மால்ட்டா (Malta):
தெற்கு ஐரோப்பாவின் மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள உள்ள இந்நாடு, மக்கள் தொகை அடர்த்தியுடன் கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அவை அமைந்துள்ன.
சுற்றிலும் கடலால் சூழப்பட்டும், சீராக கட்டப்பட்டிருக்கும் பழமையான கட்டிடங்கள் நிறைந்தும், 316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் அமைந்துள்ள மால்ட்டாவில், சுமார் 4 லட்சத்து இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மால்ட்டீஸையும், ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாகக் கொண்டு விளங்கும் மால்ட்டாவில், ரோமன் கத்தோலிக்க மதத்தை பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
மொண்டெனேகுரோ(Montenegro)
மொண்டெனேகுரோவில் வசிக்கும் மக்கள், இந்த நாட்டின் பெயரை, செர்னகோரா என்றும் அழைக்கின்றனர்.மேற்கில் குரோசியாவையும், வடமேற்கில் பொசுனியாவும், எர்செகோவினாவையும், வடகிழக்கில் செர்பியாவையும், தென்கிழக்கில் அல்பேனியாவையும், தெற்கில் அட்டிரியேடிக் கடலையும் எல்லைகளாக கொண்டுள்ள இந்த நாடு, மொத்தம் 14 ஆயிரத்து 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
காண்போர் கண்களைக் கவரும் வகையில் கடலாலும், மலைகளாலும், அழகியப் புல்வெளிகளாலும் சூழப்பட்டுள்ள இந்த நாட்டில், சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
1918 ஆம் ஆண்டுவரை சுதந்திர நாடாக காணப்பட்ட மொண்டெனேகுரோ, பின்வந்த காலங்களில், யுகோசுலாவியா மற்றும் செர்பியா போன்ற பல நாடுகளுடன் இணைந்திருந்தது.இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மொண்டெனேகுரோ தனி நாடாக பிரகடனம் செய்தது. அதன்படி, 2006 ஆம் ஆண்டு ஜூன் 28 இல், ஐக்கிய நாடுகள் சபையின் 192வது நாடாக மொண்டெனேகுரோ இணைத்துக் கொள்ளப்பட்டது.