பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கைகொடுக்க வேண்டும் என சவுதி இளவரசருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா- மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்திய உள்கட்டமைப்புகளில் சவுதி அரசு முதலீடு செய்வதை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒற்றுமையாக உள்ளதாக தெரிவித்த அவர், பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கைகொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் பொது கவலையாக உள்ளது என்றார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்திய உளவுத்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதி அளித்த முகமது பின் சல்மான், இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் அண்டை நாடுகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.