இன்றயை உலகம் மிகவும் அமைதியாக உள்ளது போன்று இருக்கிறது, ஆனால் அதன் பின் இருக்கும் விஷயங்களை பார்த்தால் மூன்றாவது உலகப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் நம்மிடையே தோன்றுகிறது. ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்து கொள்ள பல்வேறு ராணுவ நடவடிக்கைளை மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபட்டு வருகிறது. அண்மையில் வெளியான சில ஆய்வுகள், உலகின் சகோதரத்துவத்தை கேள்விக்குறியாகியுள்ளது.
அந்நிய நாடுகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ராணுவத்தை பலப்படுத்துவது வழக்கமான ஒன்று என்றாலும், அதிகப்படியான பலத்தை சேர்ப்பது உலக அமைதிக்கு எதிராகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, தென் கொரியா, வட கொரியா போன்ற நாடுகள் ராணுவத்தில் அதிக முதலீட்டை செய்துள்ளது. அதிலும் வட கொரியா மற்ற நாடுகள் அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது வெளிப்படையான அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது.
பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியாவின் இந்த செயலால் உலக அமைதிக்கு பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. மற்ற உலக நாடுகள் அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படை தன்மையில்லாமல் முரண்பாடான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அண்மையில், போர் சூழலில் இருந்த அமெரிக்கா – கொரியா இடையே அதன் தலைவர்கள் டிரம்ப் – கிம் ஜுங் உன் சிங்கப்பூரில் கலந்து பேசியது ஆரோக்கியமானது என்றாலும், அதன் பின்புறத்தில் ஒரு அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அமெரிக்கா – கொரியா, அமெரிக்கா- ரஷ்யா, சீனா – இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என பகை உணர்வு பல ஆண்டுகள் கடந்தும் அதன் வீரியம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, கொரியா நாடுகள் பல பில்லியன்களை தன்னுடைய ஆயுத பலத்தில் கொட்டி வருகிறது. ஏவுகணை, கடற்படை, விமானப் படை, நீர் மூழ்கி போர் கப்பல் என தன்னுடைய பலத்தை பன்மடங்கு காட்டி உலகில் ஒரு மறைமுக போரை நடத்தி வருகின்றன.
சமீபத்தில் வெளி வந்த ஆய்வுகளில் எந்த நாடும் தன்னுடைய ஆயுத பலத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. 2018ஆம் ஆண்டு இறுதியில் உள்ள இந்த மர்மம், 2019ஆம் ஆண்டு பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும், உலக நாடுகள் அதிக அளவில் ராணுவத்தில் முதலீட்டை செலுத்தும் எனக் கருதப்படுகிறது.
இப்படி மனித உயிரினத்தை அச்சுறுத்தும் இந்த மறைமுக போர் தணிய, வரும் காலங்களில் உலக தலைவர்கள் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.