மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க உலக நாடுகள் வலியுறுத்தல்

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது நடத்திய தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கவுள்ள பிரான்ஸ் நாடு, மசூத் அசாரை தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்க தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும், உலகளவில் பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும், சொத்துக்களை முடக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 2017ல் மசூத் அசாரின் தடை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனா, இதை தடுத்தது. இதனிடையே, சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன அதிகாரிகளை சந்தித்து, பால்கோட் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, மார்ச் மாதத்தில் பிரான்ஸ் கொண்டுவரவுள்ள மசூத் அசாரின் தடைக்கு சீனா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Exit mobile version