குர்து இன மக்கள் மீது துருக்கி தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்

துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தனிநாட்டை உருவாக்க இவர்கள் பாடுபட்டு வருகிறார்கள். தற்போது உலகின் மிகப்பெரிய நிலமற்ற நாடுகளில் குர்திஸ்தானும் ஒன்றாகும்.

குர்து மக்கள் வாழ்வதற்கு விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டின் எல்லை அருகே இருப்பதை துருக்கி விரும்பவில்லை. குர்துகள் துருக்கியில் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர். இவர்கள் “மவுண்டன் டர்க்ஸ்” என்றும் அழைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் பாரம்பரிய ஆடைகளை அணியவோ, அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டு உள்ளது.

துருக்கியில் உள்ள குர்து மக்கள், அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்காகக் போராடி வந்தனர். இந்நிலையில்தான், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறின. இந்த நிலையில் குர்து இனப் போராளிகளை தாக்க நல்ல சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, சாதகமாக அமைந்துவிட்டது.

இந்த நிகழ்வின் காரணமாக குர்து இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது. துருக்கி, சிரியாவின் ரஸ் அல்அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 1 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக ஐ.நா கூறியுள்ளது. இதுவரை ஒய்.பி.ஜி குழுக்களின் 181 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் எல்லையையொட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்து போராளிகள் குழுக்களுக்கு எதிராக தொடங்கியுள்ள இந்தப் போரால், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. துருக்கியின் இந்த செயலை இந்தியா, பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் கண்டித்துள்ளன. இங்கிலாந்து, ஈராக் போன்ற பல நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க படையின் இந்த திடீர் வெளியேற்றத்தால் அங்கு உள்ள அப்பாவி குர்து இன மக்களின் வாழ்கை அபாயத்தை எட்டியுள்ளது.

Exit mobile version