உலகக் குத்துச் சண்டை அரையிறுதியில் மேரி கோம் தோல்வி: சர்ச்சையில் முடிந்த ஆட்டம்!

ரஷ்யாவில் நடைபெற்ற உலக சாம்பியன்சிப் குத்துச் சண்டைப் போட்டி அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான மேரி கோம் தோல்வியைத் தழுவினார்.

ரஷ்யாவின் உலான் உடே நகரில் நடைபெற்ற போட்டியில் காலிறுதியில் கொலம்பியாவின் வாலன்சியாவை எதிர்கொண்ட மேரிகோம் 5க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். இந்நிலையில் அரையிறுதியில் துருக்கியின் புசினாசை சந்தித்த அவர், 1க்கு 4 என்ற புள்ளிகளில் தோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தார். உலக சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் சர்வதேச அரங்கில் எட்டுப் பதக்கங்களை வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கியூபாவின் பெலிக்ஸ் 7 பதக்கங்களை வென்றதே உலக சாதனையாக இருந்தது.

இதனிடையே அரையிறுதிப் போட்டியையும் மேரி கோம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் நடுவர்களின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், நடுவர்களின் தீர்ப்பு சரியா, தவறா என்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேரிகோமின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் இந்தியாவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

Exit mobile version