அதிகமான வெள்ளை நிறத்தோல்” குறைபாடான அல்பீனிசத்தின் உலகளாவிய விழிப்புணர்வு தினமான இன்று, அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்…
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றும் பண்பு இல்லாத இதனை, நோய் என்பதை விட குறைபாடு என்று அழைப்பதே சரி. உடலின் நிறத்துக்கு காரணமான மெலனின் என்ற தோல் நிறமி, வெகுவாகக் குறைவதன் விளைவாக, பிறப்பிலேயே அதிவெண்மையான தோல் வரும் ஒருவகைக் குறைபாடுதான் இந்த அல்பீனிசம்.
இது மனிதர்களுக்கு மட்டும் வரும் குறைபாடு அல்ல. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, நாம் பெரிதும் ரசிக்கும் வெள்ளை மயில் என்பது உண்மையில் அல்பீனிச பாதிப்பு உள்ள மயில்தான்.
இதனை குறைபாடு என்று சொல்லக் காரணம் இது சில விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துவதால்தான். உதாரணமாக அல்பினிசம் உள்ளவர்களின் உடல், சூரிய ஒளியை ஏற்பது இல்லை. இந்த தோல் புற்று நோய்க்கும் எளிதில் வழிவகுக்கும்.
அல்பீனிச பாதிப்பு உள்ளவர்களில் நோயால் இறப்பவர்கள் ஒருபுறமென்றால் சரியான புரிதல் இல்லாததால் வெளிப்படும் கேலிபேச்சாலும், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் மறுபுறம் கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது.
மனிதனை மனிதன் நிறத்தால் பிரித்துப் பார்த்து நிகழ்த்திய கொடுமைகளின் நீட்சியாகத்தான் இந்த அவமதிப்புகளையும் நாம் பார்க்கவேண்டும். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13ம் தேதியை அல்பீனிச விழிப்புணர்வு தினமாக ஐநா சபை அறிவித்து கடைபிடித்தும் வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொதுத்தலைப்பில் அல்பீனிச விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஐ.நா., இந்த ஆண்டு “இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறோம் ” என்னும் பொதுத் தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளது. வலிமையான மனதோடு உள்ள இந்த சக மனிதர்களுக்கு நாமும் உறுதுணையாக இருக்க, உறுதி ஏற்க வேண்டிய தருணம் இது.