நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகநிலை எட்டப்படாத நிலையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உடனடியாக பணிக்கு வந்தால், 6 சதவிகித கூலி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்க தொழிலாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் வரும் 15ம் தேதி 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தத்தை கைவிட மின்துறை அமைச்சர் தங்கமணி கோரியநிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.