தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மண்ணாலான பொங்கல் பானைகள், அடுப்பு தயாரிக்கும் பணி மதுரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்…
தை திருநாளை முன்னிட்டு மண்பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிபட்டி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை துவங்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு பொங்கல் பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில், மண்பாண்ட தொழில் செய்வதற்கான மூலப்பொருள் கிடைக்காமல் தாங்கள் தவித்து வந்ததாகவும், தற்பொழுது மண் எளிதாக கிடைப்பதாகவும், இது எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்தாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தங்களது வாழ்வாதாரத்திற்கு, தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் நல்வழி காட்டியுள்ளதால், தாங்கள் சிரமம் இல்லாமல் தொழில் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் மழையால் கரையாமல் இருக்க அரசாங்கம் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தயாரிக்கும் மண்பாண்டங்களை சூளை மூலம் திடப்படுத்தி, அதை பாதுகாப்பாக வைக்க ஷெட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.