நீலகிரியில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பெட் பாட்டில்கள், குளிர்பான பெட் பாட்டில்கள் ஆகியவற்றிற்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் தொட்டபெட்டா மலைச்சிகரம், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குடிநீரை லிட்டருக்கு 1 ரூபாய் அடிப்படையில் நாணயத்தைச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.