கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் பழுதடைந்த மதகுகளை மாற்ற 20 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் துவங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதல் மதகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் உடைந்தது. இதனையடுத்து அணையில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு 3 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய மதகு பொருத்தப்பட்டது. அணையின் மற்ற 7 மதகுகளும் உறுதி தன்மை இல்லாமல் உள்ளதாக வல்லுனர் குழு தெரிவித்ததையடுத்து, 7 மதகுகளையும் புதிதாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்கூட்டத்தில், பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மதகுகளை மாற்ற தமிழக அரசு 20 கோடியே 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக தொழில்நுட்ப குழுவிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் புதிய மதகு பொருத்த டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் எனவும் அவர் கூறினார்.