கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகள் பாதிப்பதை தடுக்கும்வகையில் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் குடிநீரை நிரப்பி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் அடர்வனப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான், கரடி, கழுதைப்புலி, யானைகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்தாண்டு மழை குறைந்ததால், ஒசூர் வனப்பகுதிகளில் நீரோடைகள், கால்வாய், குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதையடுத்து வனவிலங்குகள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக கிராமப்பகுதிகளை நோக்கி படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பி வருகின்றனர். வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.