மகளிருக்கு திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கம் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய ஏழைப் பெண்களுக்கான திருமண உதவி தொகை திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 11 லட்சத்து 14 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு, 1 லட்சத்து 49 ஆயிரத்து 986 கோடி ரூபாய் மதிப்பில், 5 லட்சத்து 26 ஆயிரத்து 72 கிலோ தங்கமாகவும், 3 லட்சத்து 69 ஆயிரத்து 620 கோடி ரூபாய் நிதியாகவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 276 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.