தமிழக அரசின் உதவியோடு மகளிர் சுய உதவி குழு தொடங்கி, தன் மறுவாழ்விற்கு முன்னுரை எழுதியுள்ளனர் திருவையாறு தேவதைகள்…
குறிப்பாக நாப்கின் தயாரிப்பு தொழிலை, திறன் பட நடத்தி, லாபமீட்டி வருகிறார் லட்சிய பெண்மணி ஒருவர்…
தமிழ் செல்வி…..ஏழ்மையின் இருப்பிடம்; வறுமையின் வாரிசு; 2 குழந்தைகளுக்கு தாயான இவரது இல்லத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என்ற சொல் மட்டும் இருந்தது. கணவர் பக்கமும் சொல்லிக் கொள்ளும் படி வருவாய் இல்லை. கஷ்டம், அவர் வாழ்வின் வசந்தத்தை பெருந்திரையிட்டு மறைத்து நின்றது.
வருமானத்திற்கான வழி தேடி கொண்டிருந்த தமிழ் செல்வியின், சிந்தையில் உதித்ததுதான் நாப்கின் தயாரிக்கும் யோசனை. வறுமையில் இருந்து தப்பிக்கும் வேட்கையில் வங்கி வாசலில் ஏறி இறங்கினார்.
இறுதியில் தமிழக அரசின் உதவியோடு மகளிர் சுய உதவி குழு தொடங்கிய இந்த திருவையாறு தேவதை தன் வாழ்வை மட்டுமில்லாமல், 30 மேற்பட்ட பெண்களின் வாழ்வையும் மாற்றி அமைத்திருக்கிறார்.
வலி என்றால் என்ன என்பதை தமிழ் செல்வியின் வறுமை உணர்த்தியிருந்தது. எனவே ஒரு நாளைக்கு 4 ஆயிரம் நாப்கினை தயாரித்து அதனை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவனைகளுக்கு குறைந்த விலைக்கு தருவதன் மூலம் சாமானிய பெண்களின் துயர் துடைத்து வருகிறார் தமிழ் செல்வி.
அவரின் இந்த சேவையை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து அவரையும் அவரது குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
தீட்டு என்று சமூகம் ஒதுக்கிய தொழிலை , திறன் பட, லாமீட்டும் வகையில் நடத்தி முதலமைச்சரின் பாராட்டைப் பெற்ற இந்த திருவையாறு தேவதைகள், முயற்சி மெய் வருத்த கூலி தரும் என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கு, வலு சேர்க்கும் மற்றுமொரு உதாரணமாகி உள்ளனர் என்றால் அது மிகையில்லை!