காவல்துறை கூடுதல் ஆணையர் சீமா அகர்வாலை, அவரது கணவரும், மாநகர காவல் ஆணையருமான விஸ்வநாதன், நிகழ்ச்சி ஒன்றில், மேடம் என அழைத்ததை சக பார்வையாளர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.
மகளிர் தினத்தையொட்டி சென்னை காவல்துறை சார்பில் எழும்பூர்
ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவல் கூடுதல் இயக்குனர் மற்றும் காவல் ஆணையர் தலைமையில் மகளிர் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 காவல் குடும்பங்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முறையான ஆட்டோ பயிற்சி அளிக்கப்பட்டு, பெண்கள் இயக்கும் 12 பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் காவலர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை கூடுதல் ஆணையர் சீமா அகர்வால், மகளிர் காவல்துறையினரின் சிரமம் பற்றிய குறும்படத்தை தனது கணவரும், காவல் ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதன் தனக்கு காட்டியதாக கூறினார். அவரை விஸ்வநாதன் என்றே தான் அழைத்து வருவதாகவும் தெரிவிக்க, பார்வையாளர்கள் அதனை கைதட்டி, விசில் எழுப்பி வரவேற்றனர்.
மேலும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், தனது மனைவியான காவல்துறை கூடுதல் ஆணையர் சீமா அகர்வாலை, மரியாதைக்குரிய ஆணையர் என்று கூறி விட்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து, மேடம் என்று கூறியதை பார்வையாளர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.
முன்னதாக காவல்துறை அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடைபெற்றன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனர். நியூஸ் ஜெ. செய்திகளுக்காக செய்தியாளர்கள் குழு…