கருங்கல் பாளையத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கை பக்குவம் மாறாமல் பெண்களே நடத்திவரும் இட்லி கடைகளுக்கு, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் திருநகர் காலனியில், சாலையோரம் வரிசை கட்டி அமைந்துள்ள கடைகளில், அடுக்கு சட்டியில் அவித்தெடுக்கப்படும் இட்லியையும் அதனை வாங்க காத்திருக்கும் கூட்டத்தையும் காணாமல், யாருமே இந்த பகுதியை கடந்து செல்ல முடியாது.
அப்படி என்ன சிறப்பு இந்த இட்லி கடைகளில்?
40 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஓரிருவர் நடத்தி வந்த மாலைநேர இட்லி
கடைகளிளுக்கு வாடிக்கையாளர்கள் பெருகவே, அதனை முழு நேர
குடிசை தொழிலாகவே மாற்றி வரிசையாய் கடைகள் போட்டு விட்டனர் அவர்களின் வாரிசுகள்.
இப்படியும் அப்படியுமாய் 10 கடைகள். ஒவ்வொன்றிலும் சராசரியாய் நாள் ஒன்றுக்கு
ஆயிரம் இட்லிகள் தராளமாய் விற்கப்படுகின்றன.
இங்கு, இட்லி கடைகளை நடத்துபவர்கள் அனைவரும் பெண்களே. பட்டமேற்படிப்பு முடித்த பெண்களும், பணிக்கு சென்று வந்த பெண்களும் கூட, தங்கள் பணிகளை துறந்து இட்லி கடைகளை கவனிக்க வந்து விட்டனர்.
குடும்பத்தையும் கவனித்து கொண்டு இட்லி கடைகளையும் மிக எளிதாக நடத்த முடிவதாலும், கை நிறைய லாபமும் கிடைப்பதாலும், இட்லி கடைகளில் இவர்கள் மூழ்கி விட்டனர்.
மற்ற இடங்களை விட இவர்கள் கடைகளில் கிடைக்கும் இட்லிகளுக்கு என்ன சிறப்பு என கேட்டால், கைப்பக்குவம் என்ற பதில் மட்டுமே வருகிறது இவர்களிடம்..
ஒரு மணி நேரம் ஊற வைத்த அரிசியையும் உளுந்தையும் மின் உரலில் அரைத்து இட்லிக்கான மாவை தயாரிக்கின்றனர்.
ஆர்டருக்கேற்ப காலையில் 4 மணிக்கே அடுப்பை பற்ற வைத்து இட்லி
சுடும் பணியை தொடங்கி விடுகின்றனர்.
இங்கு கடைகளில் மட்டுமல்லாமல், திருமண மண்டபங்கள் மற்றும் வீட்டு விசேசங்களுக்கும் இவர்களே அரைத்த மாவுடன் நேரில் சென்று அவரவர் இடத்திலேயே இட்லியை தயாரித்து கொடுப்பதும் உண்டு.
இப்படி தமிழகத்தில் இவர்கள் செல்லாத மாவட்டங்களே இல்லை என பட்டியலிடுகின்றனர்.
இது மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தங்களின் இட்லிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக இவர்கள் மகிழ்சியுடன் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் 50 பைசாவிற்கு விற்றகப்பட்ட இட்லி ஒன்று, தற்போதைய விலைவாசி உயர்வால் இன்று 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், ஆர்டர் தருபவரின் எண்ணத்திற்கு ஏற்ப இளநீர் இட்லி, காய்கறி இட்லி, மசாலா இட்லி என வித விதமாய் இட்லிகளில் அறுசுவையையு புகுத்தி அசத்திவருகின்றனர்…