ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் ‘பெண்களின் முன்னேற்றம்’ – என்ற பெயரிலான சர்வதேச ஆய்வறிக்கையை வெளியிட்டது. உலகெங்கும் உள்ள 89 நாடுகளில் பெண்களின் நிலை என்னவாக உள்ளது? – என்பதை இந்த ஆய்வறிக்கை நமக்குக் காட்டுகின்றது.
இந்த ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களின்படி, உலகெங்கும் 10 கோடி பெண்கள் தனிமையில் வசிப்பதோடு குழந்தைகளையும் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் வேலையையும் சேர்த்து செய்கின்றனர். இந்தப் பெண்களில் கணவனை இழந்தவர்கள், கணவனைப் பிரிந்தவர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்திற்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள்.
திருமணத்திற்குப் பின்னர் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டால், கணவன் மனைவி இருவரில் மனைவியே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை எப்போதும் ஏற்கிறார். 10 தம்பதிகள் பிரிந்தால், அதில் 8 பேரின் குழந்தைகள் பெண்களால்தான் வளர்க்கப்படுகின்றன. ஆண்கள் பொதுவாக அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள் – என்கிறது இந்த ஆய்வு.
தனித்து வாழும் இந்த 10 கோடிப் பெண்களில் சுமார் 1 கோடி பெண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்!. அதாவது, இந்தியாவில் உள்ள குடும்பங்களில் 4.5% குடும்பங்களில் தனித்து வாழும் பெண்கள்தான் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
இந்தியாவில் குழந்தைகளோஒடு இணைந்து வாழும் தம்பதிகளின் சதவிகிதம் 46.7 ஆக உள்ளது. உலக அளவில் இது 38.4% ஆகும். அது போல குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பத்தில் ஒரு அங்கமாக வாழும் பெற்றோரின் இந்திய சதவிகிதம் 31.2 ஆக உள்ளது, உலக அளவில் இது 26.6% ஆகும். இந்தக் குடும்ப அமைப்புகளில் சிலவற்றில் பெண்கள் வேலைக்கு செல்லும் தேவை இல்லை என்றாலும், குடும்பச் சுமைகள் எப்போதும் பெண்களால்தான் சுமக்கப்படுகின்றன.
இப்படியாக குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்ப அமைப்பிலும் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ள நிலையிலும், அவர்களை வலிமையற்றவர்களாகவும்,நாட்டின் பொருளாதாரத்தில் பங்காற்றாதவர்களாகவும் மக்கள் கருதுவது மிகப் பெரிய பாலியல் பாகுபாடு – என்கிறது அந்த அறிக்கை.
சமுதாயத்தில் மலர்கள் குழந்தைகள் என்றால் அதன் வேர்களாக உள்ளவர்கள் பெண்கள், அந்த வேர்கள் புழுக்கத்தி உள்ளன – என்று ஆதாரங்களுடன் கூறுகிறது ஐ.நா.சபை. தனித்து வாழும் பெண்களுக்கு பொருளாதார உதவிகளை நம்மால் செய்ய இயலாவிட்டாலும், அவர்கள் மீது அன்பையாவது நாம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதுதான் மனிதத் தன்மையுள்ள செயலாக இருக்கும்.