தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் மற்றும் பெண்ணின் பாதுகாப்பை வலியறுத்தி, 200க்கும் மேற்பட்ட மாணவிகள், தற்காப்புக் கலையான சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில், பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாக முன்னேறி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் பயின்ற மாணவிகள், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிலம்பம் சுற்றி அசத்தினர். தற்காப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 வயது சிறுமி முதல், கல்லூரி மாணவிகள் வரை 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.
சிலம்பம் சுற்றுவது, உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதுடன், மன வலிமையையும், துணிச்சலையும் அளிப்பதாகவும் மாணவி நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சென்னை அம்பத்தூரில் வசித்துவரும், அழகிரி என்பவர், நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்று தருகிறார். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருவதாக சிலம்பம் பயிற்சியாளர் அழகிரி தெரிவிக்கிறார். சிலம்பம் பயிற்சி செய்வதற்கு பூங்கா, கடற்கரை, அரசு அலுவலகங்களை பயன்படுத்திவருவதாகவும், இதற்காக தமிழக அரசுக்கும் காவல் துறையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
பாரம்பரிய கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.