கேரள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பெண்கள்!!

கேரள அரசியலில் ஆளுங்கட்சி மீது அவ்வப்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தலைதூக்கும். அந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருந்து வருகிறது…. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற பாரபட்சமில்லாமல் சிக்கலை உண்டாக்கி பெண் பிரபலங்கள் யார்? யார் என்பது பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்..

கடந்த 2013ம் ஆண்டு கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது சோலார் பேனல் ஊழல் விவகாரம்… டீம் சோலார் என்ற நிறுவனம் மூலமாக கேரளாவில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி நடிகையும் தொழில் அதிபருமான சரிதா நாயர் மீது கடுமையான மோசடி புகார்கள் குவிந்தன… கேரளாவில் அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கும் இந்த ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

2016ம் ஆண்டு கேரளாவில் தேர்தலில் சோலார் பேனல் ஊழல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தேர்தல் உத்தியாக கையில் எடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. உம்மன் சாண்டி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதால் முதலமைச்சரானார் பினராயி விஜயன்…

ஆனால் இப்போதோ பினராயி விஜயனே அதேபோன்றதொரு சிக்கலில் சிக்கியுள்ளார். உம்மன் சாண்டிக்கு சரிதா நாயரால் சிக்கல் என்றால் பினராயி விஜயனுக்கு ஸ்வப்னா என்பவர் மூலம் தலைவலி உண்டாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத்துறையில் முக்கியப் பணியில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… பினராயி விஜயனின் முதன்மை செயலராக இருந்த எம். சிவசங்கர் தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். சமீபத்தில்தான் அவருடைய முதன்மை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பில் இருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

கேரளாவின் முக்கிய அரசியல் அதிர்வுகளுக்கு பெண்களே காரணமாக அமைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version