பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் போது விண்வெளி நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் ஆண் வீரர்களாக மட்டுமே இருக்கின்றனர். பெண்கள் இதுவரை இந்தப் பணிகளைத் தனியாகச் செய்தது கிடையாது. அதாவது விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது வழக்கம்.

1965ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 213 வீரர்கள் விண்வெளியில் நடந்து இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் 14 வீராங்கனைகள் மட்டுமே விண்வெளி நடையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள், வீரர்களோடு இணைந்துதான் சென்று இருக்கின்றனர்.

இந்த நிலையில், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த வரலாற்று நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் முயற்சியில் ‘நாசா’ மீண்டும் இறங்கி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய 2 வீராங்கனைகள் வரும் 21ஆம் தேதி ஆண் வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.

Exit mobile version