ஈரோடு அருகே திருமணம் முடிந்த ஒரு வாரத்தில், கணவனை விட்டு ஓடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
மணமகன் வீட்டார் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குட்டை தயிர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான முருகேசன்.
தறிப்பட்டறையில் பணியாற்றி வரும் இவர் திருமணம் ஆகாமல், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருந்த முருகேசனுக்கு தாய் தந்தை பெண் பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் முருகேசனின் உறவினர் பெண் கெளசி என்பவர் மூலம், கோவையை சேர்ந்த 36 வயதான தேவி என்பவரை பெண் பார்க்க சென்றனர்.
அங்கு வைத்து தேவிக்கு தாய் தந்தை இல்லையென்றும், உறவினர் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும் இருவீட்டார் சம்மதத்துடன் கோயிலில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த முருகேசனின் உறவினர் பெண்ணான கெளசி என்பருக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் புரோக்கர் கமிஷனும் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மறு வீடு அழைப்புக்கு செல்ல வேண்டும் என முருகேசனின் மனைவி தேவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோவையில் உள்ள தேவியின் சித்தி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து பல்லடம் பகுதியில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு 4 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறி சென்ற தேவி, மீண்டும் கணவர் முருகேசன் வீட்டிற்கு வரவேயில்லை.
தொடர்ந்து முருகேசன் குடும்பத்தார் 4 நாட்கள் கழித்து தேவியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளனர்.
ஆனால் தேவியோ பல காரணங்கள் சொல்லி தட்டிகழித்து வந்துள்ளார். இந்த நிலையில், மனைவி குறித்து முருகேசன் விசாரித்தபோது அவரது உறவினர்கள் என்று கூறியவர்கள் அனைவரும் திருமண புரோக்கர்கள் என்பதை கேட்டு அதிர்ந்துபோனார்.
தாங்கள் ஒரு மோசடி கும்பலிடம் சிக்கியதை உணர்ந்த முருகேசன் குடும்பத்தினர் திருமணம் செய்து ஏமாற்றி பணம் பெற்றுகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாங்கள் புரோக்கர் கமிஷனாக கொடுத்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம், ஒரு பவுன் நகையை மீட்டு தர வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கத்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.