பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் முகமது ஆரிப் மற்றும் நவீன், சிவா, கேசவலு ஆகியோரை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 4 பேரையும் தூக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

பத்து நாட்களில் நீதி கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மகளின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் பெற்றோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version