உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்த பெண் ; கரம் பிடித்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த பெண்ணை, கார் ஓட்டுநர் ஒருவர் கரம் பிடித்துள்ளார். தனக்கு வரும் மனைவி அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலையே வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உத்திரபிரதேசத்தில் ஒருவர், பிச்சை எடுக்கும் பெண்ணை காதல் செய்து, அவரையே மணமும் முடித்துள்ளார். அனில் என்ற அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உணவு தேவைப்படுவோருக்கு உணவு பொட்டலங்களை வழங்க அவர் முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் உணவு தயாரித்து, அதனை காரில் எடுத்துச்சென்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு வழங்கி வந்தார். காகாதியோ என்ற பகுதி வழியாக அவர் பயணித்தபோது, அலங்கோலமான நிலையில், அழுக்கான ஆடைகளுடன் இளம்பெண் ஒருவர் பாலத்தின் அடியில் இருப்பதை அவர் பார்த்தார். உடனே தான் வைத்திருந்த உணவு பொட்டலம் ஒன்றை அந்த பெண்ணிற்கு அனில் வழங்கினார்.

பின்னர், அவர் அவ்வழியாக செல்லும்போதெல்லாம் அந்த பெண்ணிற்கு உணவு பொட்டலம் வழங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படியே நாட்கள் நகர்ந்த நிலையில், ஒருநாள் அந்த பெண்ணிடம் சுய விவரங்களை கேட்டுள்ளார். தன் பெயர் நீலம் எனவும், தனது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே, தனது தாயார் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். அத்துடன், தனது அண்ணனும் தன்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டதால், வேறு வழி தெரியாமல் பிச்சை எடுக்க தொடங்கியதாக இளம்பெண் கூறினார். பிச்சை எடுக்கும் பெண்ணின் கதை, அனிலின் மனதை வேதனை கொள்ளச் செய்தது. இதனால் அப்பெண்ணின் மீது அவருக்கு காதலும் துளிர்த்தது. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல் நாள்தோறும் அப்பெண்ணிற்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தார். ஒருநாள் அந்த பெண்ணிடம் சென்று, அனில் தனது காதலை வெளிப்படுத்த, இதனை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் முதலில் அதிர்ச்சியடைந்து, பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார்.

இதனை தனது முதலாளியான லால்டா பிரசாத் என்பவரிடமும் அனில் தெரிவித்தார். சமூக சேவகரான லால்டா பிரசாத் தலைமையில், புத்த ஆசிரமம் ஒன்றில் அனிலுக்கும், நீலத்திற்கும் தற்போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த புதுமணத் தம்பதிக்கு, நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அனைவரிடமும் இடைவெளியை ஏற்படுத்திய ஊரடங்கானது, உத்தரபிரதேசத்தில் இரண்டு மனங்களை இணைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version