வாணியம்பாடி அருகே செம்மர கட்டை கடத்தல் கூலி தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் . இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, இளையகுமார், பழனி, மற்றொரு பழனி, சென்றாயன், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய் ஆகிய 7 பேரை ஆந்திர பகுதிக்கு காட்டில் செம்மரம் வெட்ட அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதற்கான கூலியை 7 பேருக்கும் தராமல் அவர்களை அழைத்து சென்ற சீனிவாசன் இழுத்தடித்து வந்தார். இதனால் கடந்த 3-ந்தேதி தங்களுக்கு வர வேண்டிய கூலி-யை கேட்டு சீனிவாசன் வீட்டுக்கு 7 பேரும் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை அவர்கள் காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது வீட்டிலிருந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா, தாய் மல்லிகா சீனிவாசனை கடத்த முயன்றதை தடுக்க முற்பட்டனர். அப்போது அவர்களை தாக்கிய அந்த கும்பல் ஸ்ரீனிவாசனின் மனைவி சாந்திபிரியாவை கழுத்தை நெரித்து சுவற்றில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா, மல்லிகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சாந்தி பிரியா பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவத்தையறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ஒடுகத்தூர் அருகே கடத்தல் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளைக் கைப்பற்றினர். மேலும், இளம்பெண் கொலை தொடர்பாக செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா உள்பட 6 பேரை தேடிப்பிடித்துக் கைதுசெய்தனர். வெங்கடேசன் என்பவர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் பி.எம்.முனிவேல் தான் முக்கியக் குற்றவாளி என்பது தெரியவந்தது. அதையடுத்து, முனிவேலையும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
ஸ்ரீனிவாசனை 7 பேரும் மிரட்டுவதற்கு முன்பாகவே திமுக பிரமுகர் முனிவேல் அவர் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். எனவே திமுக பி.எம்.முனிவேல் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பிரமுகர்கள் செம்மரம் கடத்துவது ஒன்றும் புதில்ல என்றாலும் திமுக கட்சி பணியோடு சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.