திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படையினர், கிராமம் கிராமாக சென்று விடிய, விடிய சோதனை நடத்தினர். சோதனையில் சிப்காட் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தி என்பவரது வீட்டில் மது விற்பனை நடப்பது தெரியவந்தது. மதுபான கடைகளில் விற்பது போன்று, பெட்டி பெட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 355 மது பாட்டில்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன், ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளதால், இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஆனந்தியை கைது செய்த சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மதுவிலக்கு காவல்துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மதுபானக்கடை விடுமுறை நாட்களில், இதுபோன்ற கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்ட நினைக்கும் இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.