கர்ப்பிணி பெண்போல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாடகமாடிய பெண் ஒருவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிரசவ வார்டு பகுதியில், சபீனா என்ற பெண் கர்ப்பிணி போன்று நாடகமாடியுள்ளார். இந்த நிலையில், சபீனாவின் உறவினர்கள், மருத்துவரிடம் சபீனாவுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என விசாரித்ததாக தெரிகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சபீனா கர்ப்பம் அடைந்ததுபோல் வயிற்றில் துணி வைத்துக் கொண்டு நாடகமாடியுள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சபீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி போல் இருந்து கொண்டு, சபீனா குழந்தை கடத்தலில் ஈடுபட்டாரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.