திருப்பதியில் 9 மாத பெண் குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற சென்னையை சேர்ந்த காவல்துறை முன்னாள் உதவி ஆய்வாளரின் பேத்தியை கடத்த முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த காவல்துறை முன்னாள் உதவி ஆய்வாளர் சுப்பையா தனது மகன் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். திருமலையில் உள்ள யாத்திரிகள் சமுதாய கூடம் ஒன்றில் நான்காவது அரங்கில் 955 என் லாக்கரை பெற்றுக்கொண்டு உடமைகளை வைத்துவிட்டு இரவு தங்கி உள்ளனர்.

இந்நிலையில் தங்களின் அருகில் படுக்க வைத்திருந்த 9 மாத பெண் குழந்தையை பெண் ஒருவர் எடுத்து செல்வதை அங்கிருந்த பெண் சவரத் தொழிலாளி பார்த்து மிரட்டியுள்ளார். உடனடியாக குழந்தையை கடத்திச் செல்ல இருந்தது குறித்து மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை பிடித்த மணிகண்டன், அவரை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், அந்த பெண் நெல்லூரை சேர்ந்த பத்மா என்பதும் அவருடைய கணவருடன் சேர்ந்து குழந்தையை கடத்த இருந்ததும் தெரியவந்தது. எதற்காக குழந்தையை கடத்த முயன்றார்கள், குழந்தை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version