சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி சேமிப்பு கணக்குகளின் ஆண்டு வட்டி ஏப்ரல் 1ம் தேதி முதல் 4 சதவிகிதத்தில் இருந்து 3 புள்ளி 5 சதவிகிதமாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேபோல், வருங்கால வைப்பு நிதி வட்டி 7 புள்ளி 1 சதவிகிதத்தில் இருந்து 6 புள்ளி 4 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும், ஒராண்டுக்கால வைப்புத் தொகைக்கான வட்டி 5 புள்ளி 5 சதவிகிதத்தில் இருந்து 4 புள்ளி 4 ஆக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 3 புள்ளி 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.