பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவர்களின் கோரிக்கைகள் 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து, இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மக்கள் நலத்தை பாதிக்கும் இத்தகைய போராட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.