மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ளன.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 10ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அன்றைய தினம் மாலையே நடைமுறைக்கு வந்தன. கடந்த மார்ச் 10ல் தொடங்கிய தேர்தல் பணிகள், கடந்த மே 23ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கையுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் பிரச்னை நேரிட்டால் மறுவாக்குப் பதிவு போன்ற அம்சங்களுக்காக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மே 27ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தமிழகத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன. எந்தச் சிக்கலும் இல்லாத சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து, வரும் 28ம் தேதி முதல் அரசுப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதுடன், புதிய திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் பணிகள் ஆகியன தொடங்கவுள்ளன.