கொடைக்கானலில் போதை பொருட்களுடன் இரவு விருந்து கொண்டாடிய 250 பேரை பிடித்து எச்சரித்த காவல்துறையினர், விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு விருந்து நடைபெற்று வருவதாக சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், ஐடி துறையினர் கலந்து கொண்டு வந்துள்ளனர். இந்த இரவு விருந்தின் போது, மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் இரவு விருந்து நடைபெற்று வருவதை காவல்துறையினர் கண்காணித்தனர். 3 டிஎஸ்பிகள் தலைமையில்,100-க்கும் மேற்பட்ட காவலர்கள் விருந்து நடைபெற்ற தனியார் தோட்டத்தை சுற்றி வளைத்தனர். அங்கு போதையில் இருந்த 250-க்கும் மேற்பட்டவர்களை பிடித்த காவல்துறையினர், எச்சரித்து அனுப்பினர். மேலும், விருந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் தோட்ட உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.