மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்று சாதனை படைத்த சிறுமி

2014 ஆம் ஆண்டில் உறைந்த வனப்பகுதியில் நாயுடன் காணமல் போன 4 வயது சிறுமி 9 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமி தற்போது பல்வேறு சாதனை படைத்து வருகிறார்.

ரஷ்யாவின் யாகுடியா குடியரசைச் சேர்ந்த கரினா சிகிடோவா என்கிற 4 வயது சிறுமி, கடந்த 2014ம் ஆண்டு தனது நாய் நைடாவுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று வீடு திரும்ப வழி தெரியாமல் சிக்கியுள்ளார்.பின்னர் உறைய வைக்கும் குளிரில் போதுமான வசதி இல்லாத அந்த காட்டில், கரடிகளும், ஓநாய்களும் அதிகம் சுற்றித் திரிவதால் சிறுமியின் நிலையை நினைத்துப் பெற்றோர் பெரும் கலக்கமடைந்தனர். இந்த சம்பவமானது உலக ஊடகங்கள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தது.

இது ஒருபுறமிருக்க சிறுமியை பெரிய படையே காட்டிற்குள் தேடிக்கொண்டிருந்தது. 9 இரவுகள், 9 பகல்களுக்குப் பிறகு இறுதியாக சிறுமியைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பயங்கரமான அந்தக் காட்டிற்குள் சிறுமி எப்படி உயிர்பிழைத்தார் என்பது குறித்துக் கேட்டபோது வியப்பளித்தது. இரவு நேரத்தைப் பெரிய மரங்களின் வேர்களுக்கு இடையே கரினாவும் நைடாவும் கழித்துள்ளனர். அதிகமான குளிரின்போது நைடா, கரினாவின் மேல் படுத்துக்கொண்டு கதகதப்பை அளித்துள்ளது.

பசிக்கு பெர்ரி பழங்களையும் ஆற்றில் ஓடிய தண்ணீரையும் உட்கொண்டு உயிர்வாழ்ந்ததாக கரினா கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற அந்த 4 வயது சிறுமி மற்றும் அதன் நாய் நைடாவை கௌரவிக்கும் விதமாக பிராந்திய தலைநகர் யாகுட்ஸ்கில் 2 ஆண்டுகள் கழித்து சிலை நிறுவப்பட்டது.அதேபோலச் சிறுமியைப் பற்றி பிரபலமான புத்தகம் ஒன்றும் எழுதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளம் நடனக் கலைஞராக ஜொலித்து வந்த சிறுமி, தற்போது ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

Exit mobile version