சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை, இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றனர். பணியின் போது உயிரிழந்த வில்சன் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கான நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதயைடுத்து, வில்சன் குடும்பத்தினரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியதுடன், ஒரு கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
தனது கணவரை கொலை செய்தவர்களை கைது செய்ய தண்டனை வழங்கப்படும் என்றும், தனது மகளுக்கு அரசு வேலை தருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி தெரிவித்தார். நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.