சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடுஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டபேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் அருள் சிமெண்ட் விலை குறித்து உரையாற்றினார்.
அதில், அண்டை மாநிலங்களில் 350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் சிமெண்ட், தமிழ்நாட்டில் 450 ரூபாய் அளவுக்கு கடுமையாக விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
சிறிய அளவிலான வீடு கட்ட வேண்டும் என்ற சாமானியர்களின் கனவு, சிமெண்ட் விலை உயர்வால் தகர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆலை அதிபர்களுக்குள் இருக்கும் சிண்டிகேட் கமிட்டி ஒன்றுக்கூடி விலை உயர்வை முடிவு செய்வதால் தினசரி விலை உயர்வு ஏற்படுவதாகவும் பாமக உறுப்பினர் கூறினார்.
தனியார் ஆலைகளின் சிமெண்ட் விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அரசு ஆலைகளில் சிமெண்ட் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர்,
சிமெண்ட் விலையை குறைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.