அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருத்துவப் பணியாளர்களை நியமிக்குமா அரசு?

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ள சூழலில், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அதிர்ச்சிகரமான சூழல் நிலவுவதாக மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கின்றன.

கொரோனா 2ஆம் அலை இந்திய மாநிலங்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல! ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்களிலே உயிரிழப்பதும், சிகிச்சைக்கு அனுமதிக்காததால் மருத்துவமனை வாயில்களிலே மரணத்தை தழுவுவதும், உயிர்காக்கும் மருந்துகளை வாங்க அடித்துப் பிடித்துக் கொண்டு முண்டியடிப்பதும் கண்முன் சாட்சிகளாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இத்தனையையும் தாண்டிய ஒரு பேராபத்து மெல்ல மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாதது. சிறப்பு முகாம்களையும் படுக்கைகளையும் அதிகரிக்கும் அரசு, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதே எண்ணிக்கையிலேயே மருத்துவர்கள் பணி செய்கின்றனர். இதனால், அவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதிப்பதோடு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் உருவாகி வருகிறது.

இந்த சிக்கலுக்கான ஒரே தீர்வு மருத்துவப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே என்கிறார்கள் மருத்துவ சங்கத்தினர்.

தொற்று பாதிப்பால் நாடெங்கிலும் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ள இந்நேரத்தில், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைத்திட மருத்துவப் பணி நியமனங்களை மேற்கொள்வதே உயிரிழப்புகளை தடுக்கும்… தவிர்க்கும்!

Exit mobile version