பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் உடைகிறதா ஐரோப்பிய யூனியன்?

பிரெக்ஸிட் ஒப்பந்தப்படி, வரும் ஜனவரியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற உள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பே சிதைந்துவிடுமோ என்ற அச்சம் சமீப நாட்களில் தோன்றி உள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் இணைந்து உருவாக்கிய நாடு தாண்டிய அரசிடை அமைப்பே ஐரோப்பிய யூனியன் ஆகும். இது கடந்த 1992ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொது நாணயமாக யூரோ இருந்து  வருகிறது. தற்போது ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 28 நாடுகள் உள்ளன. பிரெக்ஸிட் திட்டத்தின்படி பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து, வரும் ஆண்டு ஜனவரியில் வெளியேற உள்ளது, அப்போது ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆகக் குறையும்.
 
கடந்த சில ஆண்டுகளில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகள் ஐரோப்பிய யூனியனின் உறுதித் தன்மையைப் பெரிதும் பாதித்து உள்ளன. இதனால் தற்போது ஐரோப்பிய யூனியனின் பல்வேறு உறுப்பு நாடுகள், வெளியேற்றம் குறித்து தைரியமாகப் பேசத் தொடங்கி உள்ளன. தங்கள் நாடுகளின் நீதித் துறையின் அதிகாரத்தில் ஐரோப்பிய யூனியன் தலையிடுவதே இதற்கு மிக முக்கியக் காரணமாக, அதிருப்தி நாடுகளால் கூறப்படுகின்றன.
 
சமீபத்தில் போலந்து நாட்டின் தீர்ப்புகளில் ஐரோப்பிய யூனியன் தலையிட்டது, இதனால் கோபமடைந்த போலந்து நீதித்துறை, இந்தத் தலையீடுகள் தொடர்ந்தால் நாங்களும் பிரிட்டன் போல ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிடும் – என எச்சரித்து இருந்தது. இந்தப் பரபரப்பு அடங்கும் முன்னரே, வெளியேற்றம் குறித்த எச்சரிக்கையை ஸ்பெயினும் வெளியிட்டு உள்ளது.
 
சமீபத்தில், ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிரிவினைவாதத் தலைவர் ஓரிலோல் ஜுன்குயராஸ் (Orilol junqueras) என்பவர் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்பெயின் நாட்டின் அரசியல் சாசனம் மீது பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாததால், அவரது பதவியேற்பு செல்லாது என ஸ்பெயின் கூறியது. இந்த வாதத்தை ஐரோப்பிய யூனியனின் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. இதனால்தான் ஸ்பெயினும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்து பேச ஆரம்பித்துவிட்டது.
 
இந்த சூழலில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெற்றிகரமாக வெளியேறி, அதன் மூலம் சில சாதகங்களையும் அது அடைந்தால், ஐரோப்பிய யூனியன் விரைவில் உடைந்துவிடும் – என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
 
சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு போட்டியாகத் திகழக் கூடிய வலிமை மிக்க அமைப்பாக ஐரோப்பிய யூனியன் வளர்ந்து வந்தது, ஐரோப்பிய யூனியன் சிதைந்தால் அது உலக அரங்கில் அமெரிக்காவின் கை மீண்டும் ஓங்கக் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.

Exit mobile version