திருச்சி சமயபுரத்திற்கு கண்ணபுரம், கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், என பல பெயர்கள் உண்டு. ஒரே ஊர் இத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும் சமயபுரம் மாரியம்மன் என்றால் தெரியாதவர் யாருமில்லை. நாடி வருவபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும் சமயபுரம் மாரியம்மனை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்…
திருச்சிக்கு வடக்கில், கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக அமைந்துள்ளது.
தற்போதைய ஆலயம் கி.பி. 1804 ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 71 கிலோ தங்கமும் 3 கிலோ செம்பும் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அம்மனின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி பக்தர்கள்
வழிபடுகிறார்கள்.
சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரமாகும். இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள தீர்த்தத்திற்கு
மாரி தீர்த்தம் என்றும் பெயர் வழங்கபடுகிறது.
இக்கோவிலில் பல்வேறு நாட்களில் விசேச பூஜைகள் நடைபெற்றாலும் தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதிக்கு நீராட வரும் நிகழ்வு சிறப்பானதாகும். அன்று ஸ்ரீரங்கப் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள்,
உள்ளிட்டவை‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்திப்பெற்றது.குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி இந்த வேண்டுதலை நேர்ந்து கொள்கிறார்கள்.
காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்து வசதி இருப்பதால் எளிதாக சென்று வரலாம்.