உண்ணாவிரதம் – அரிவன்சின் திடீர் அறிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே வேளாண் திருத்த மசோதாக்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. அப்போது மாநிலங்களவை துணைத்தலைவர் அரிவன்சின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மைக்கை உடைத்ததுடன், அவை விதிமுறை புத்தகத்தை கிழித்து எறிந்தனர். இதனைத் தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ பிரையன், தோலா சென், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சதவ், சையது நாசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராகேஷ், இளமரம் கரீம் ஆகிய 8 எம்.பிக்கள் ஒருவாரம் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, துணைத் தலைவர் அரிவன்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறையால் காயமுற்றதாகவும், இரண்டு நாள் இரவு தூங்காமல் தவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தின் மாண்புகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிடும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்டதாகவும் அரிவன்ஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புத்தரின் போதனைகளை தாம் பின்பற்றுவதாகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளால் தமது மனம் வேதனை அடைந்துள்ளதால், ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாகவும் ஹரிவன்ஸ் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதே கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அனுப்பி வைத்துள்ளார்.

Exit mobile version