ஐ.நா அமைப்பிலிருந்து நீக்கப்படுமா சீனா? – நிரந்தர உறுப்பினராக உருவெடுக்குமா இந்தியா?

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து சீனாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகளில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். ஐநா உறுப்பு நாடுகள் இடையே அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த அமைப்பின் பணியாகும்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டுமே உள்ளன. ஐ.நா. சபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிராகரிக்கும் உரிமை இந்த 5 நாடுகளுக்கு மட்டுமே உள்ளது.

இந்நிலையில், கொரோனா விவகாரம் காரணமாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து சீனாவை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற வாதமும் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா கூட இந்த கோரிக்கையை முன்வைத்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக சேர தகுதி வாய்ந்த நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்தது. ரஷ்யாவை போலவே, அமெரிக்காவும், இங்கிலாந்தும் இதற்கு முன்னர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இருந்தபோதிலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ஒரு நாட்டை நீக்குவதோ, அல்லது புதிதாக ஒரு நாட்டை நிரந்தர உறுப்பினராக நியமிப்பதோ அத்தனை சுலபமில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய வேண்டும் என்றால், ஐநா சாசனத்தில் முதலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பிறகு, ஐநாவின் உறுப்பு நாடுகளில் மூன்றில் 2 பகுதியினர் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். அத்துடன், 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் ஒப்புதலும் தேவை. இவ்வாறு செய்தால் மட்டும்தான், ஒரு நாட்டை வெளியேற்றவோ, புதிதாக ஒரு நாட்டை இணைக்கவோ முடியும். ஆனால், இந்தியா நிரந்தர உறுப்பினராக, சீனா ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த அளவே உள்ளன. எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

இதில், சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருந்த ஒரு நாட்டை வெளியேற்றிவிட்டுதான், சீனா அந்த இடத்தை அடைந்துள்ளது.

1971ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினராக தைவான்தான் இருந்து வந்தது. ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் தைவான் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்திற்கு சீனா கொண்டு வரப்பட்டது. எனவே, நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாட்டை வெளியேற்றுவது இதற்கு முன்பே நடைபெற்றுள்ளது.

எனவே, தற்போது சீனாவை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, கொரோனா விவாகரத்தையும், பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் போக்கையும் காரணம் காட்டி, சீனாவை தண்டிக்க முடியும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கு மற்ற 4 நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version