ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், வனவிலங்குகள் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரத் துவங்கியுள்ளன.
யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வருகின்றன. கூட்டம் கூட்டமாக வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், அணையில் உள்ள தண்ணீரில் குளித்து கும்மாளமிட்டு செல்கின்றன.
இந்நிலையில், வனவிலங்குகளை காண ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.