கோவை மாவட்டம் மாங்கரையில், செங்கற்சூளைக்குள் புகுந்த காட்டு யானைகளால் அங்கு பணி புரிந்த தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குட்பட்ட ஆனைக்கட்டி, மாங்கரை, தடாகம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன. வெயில் அதிகரித்துள்ளதால் மலைப்பகுதியிலுள்ள காட்டுயானைகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன.
இந்நிலையில், தண்ணீர் தேடி மாங்கரை, தடாகம் பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த செங்கற்களை தள்ளியும் இடித்தும் சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.