நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் சென்ற வாகனத்தை, யானைகள் வழிமறித்து நின்றதால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர்.
கெத்தை மலைப்பாதை வழியாக கோவையை எளிதில் சென்றடைய முடியும் என்பதால் மஞ்சூர், கீழ்குந்தா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மலைப்பாதைகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை யானைகள் வழிமறித்து நின்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். சில நிமிடங்கள் அங்கு நின்று கொண்டிருந்த யானைகள் பின்னர் வழிவிட்டதால் சுற்றுலாப் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.