வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னதம்பி பொள்ளாச்சி அருகே உள்ள வரகழியார் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து சேதம் விளைவித்த சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் நேற்று காலை மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட சின்னத்தம்பி யானையை, அங்கிருந்து டாப்சிலிப் பகுதிக்கு கொண்டுச்சென்றனர்.
அங்கு மருத்துவக்குழுவினர் யானையைப் பரிசோதித்து காயங்களுக்கு மருந்து போட்டனர். அப்போது சின்னத்தம்பி லாரியை குலுக்கியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சின்னத்தம்பி யானையின் கால்களின் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டு கும்கி யானை கலீம் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.