ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்த காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையில் பெங்களூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை இந்த நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக முகாமிட்டிருந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த காட்டு யானை திடீரென சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை வழிமறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நெடுஞ்சாலைகள் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் சாலையில் வாகனங்களை மறித்துக் கொண்டிருந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரானது.