விளை நிலங்களை சேதப்படுத்தி வந்த கொம்பன் காட்டு யானை 2 நாள் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானை உதவியுடன் வண்டியில் ஏற்றப்பட்ட கொம்பன், வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுப்பகுதிகளில் இரண்டு மாதங்களாக 2 யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இரண்டு காட்டுயானைகளில் கொம்பன் எனப்படும் ஆபத்தான யானையை மட்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சூளகிரி, ஓசூர்,தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி ஆகிய வனக்கோட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் மூன்று நாட்களாக போராடி வந்தனர்.
இந்தநிலையில், இன்று காலை சானமாவு வனப்பகுதிக்குட்பட்ட கதிரேப்பள்ளி என்னுமிடத்தில் கால்நடை மருத்துவக் குழுவினர் கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து மாரியப்பன், பரணி என்கிற கும்கி யானைகளின் உதவியோடு காட்டு பகுதிக்குள் இருந்து கொம்பன் யானை அழைத்து வரப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது. கொம்பன் யானை சானமாவு பகுதியிலிருந்து அழைத்து செல்லப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்படவுள்ளது.